Monday, May 23, 2011

சுவாமிக்கு உதயத்தின் கண்ணீர் அஞ்சலி....!



மட்டக்களப்பு மாதாவின் மடியில் வந்துதித்த சுவாமி விபுலாநந்தர் எடுத்த
பணியைத் தொடர்ந்தவர் சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவர்கள்
இராமகிருஷ்னமிஷன் கிழக்கிலங்கை கல்வி அபிவிருத்திக்கு கிறிஸ்தவமிஷன்
போன்று அளப்பரிய பணியை ஆற்றியிருக்கின்றது. கிழக்கில் சகல இனமக்களும்
மதத்தவரும் எந்த வேறுபாடுமற்றவகையில் ஒரே கூரையின்கீழ் கல்வியைப்பெறும்
வாய்ப்பினை மிஷன் வழங்கியது.
சுவாமி ஜீவானந்தாஜீயைத் தொடர்ந்து இப்பணியைப் பொறுப்பேற்று செவ்வனே
செய்தவர் மறைந்த சுவாமிஜீ அவர்கள். இதன்மூலம் ஆதரவற்ற வறிய
மாணவர்களுக்கு கல்விச்செல்வம் ஊட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில்
கிழக்கில் ஏற்பட்ட சுனாமி வெள்ளம் யுத்தப்பாதிப்புக்களின்போது சுவாமி
அஜராத்மாநந்தா அவர்கள் மக்கள் மத்தியில் நின்று ஆற்றிய மகத்தான
பணிகளை மறக்க முடியாது.
சுவாமியின் மறைவையொட்டி துயரில் ஆழ்ந்திருக்கும் அனைத்து இல்ல
மாணவர்களுக்கும் மிஷன் நிர்வாகத்தினருக்கும் ஒரு சமூக ஆன்மீகத்
தலைமத்துவத்தை இழந்து தவிக்கும் அனைத்து மக்களுக்கும் சுவிஸ் வாழ்
உதயம் உறவுகள் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
சுவாமியின் ஆத்மா சாந்திஅடைய பிராத்திக்கின்றோம்.
உதயம் உறவுகள்
சுவிஸ்

Tuesday, April 19, 2011

இலங்கைக்கான உதவியை இரட்டிப்பாக்க உலகவங்கி முடிவு அமைச்சர் சரத் அமுனுகமவிடம் உலக வங்கிப் பணிப்பாளர் உறுதி…..

இலங்கைக்கு வழங்கி வரும் உதவித் தொகையை அடுத்த வருடம் இரட்டிப்பாக்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ஒக்கொன்ஜோ இவெலாவை வொஷிங்டனில் சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், உலக வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார ரீதியில் நாடு முன்னேறிச் செல்வதற்கான திட்டங்களுக்கு உலக வங்கி தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எனக் குறிப்பிட்ட ஒக்கொன்ஜோ, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தலா வருமானத்தை அதிகரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டத்துக்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் தெரிவித்துள்ளார். நடுத்தர வருமானங்களைக் கொண்ட நாடுகளின் அபிவிருத்திக்கு உலக வங்கி உதவிவருகிறது எனக் குறிப்பிட்ட அவர், இதேபோன்று இலங்கைக்கும் உதவிகளை வழங்கும் என்றும் கூறியுள்ளார். இலங்கை பொருளாதார ரீதியில் துரித அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர், புனர்நிர்மாண மற்றும் அபிவிருத்திக்கான வங்கியிலிருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்கான தகுதி யைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப் பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டியிருக்கும் உலக வங்கியின் முகா மைத்துவப் பணிப்பாளர் ஒக்கொன்ஜோ இவெலா, அபிவிருத்திகள் மற்றும் திறன் களை இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையே உலக வங்கி எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் கூறி யுள்ளார். சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகமவுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.டி.தீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பீ.என்.வீரசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆந்திர பிரதேச கடற்பரப்பில் 10 இலங்கை மீனவர் கைது..

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்கள் 10 பேரையும் விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள் ளது. இந்து சமுத்திர கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் எல்லை மீறி இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாகக் கூறி ஆந்திர பிரதேச கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயணித்த இரண்டு இயந்திரப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இக்கைது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரட்ண, இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தா னிகராலயத்துடன் பேச்சு நடத்தி, மீனவர் களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சி களில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சின் ஊடகச் செயலாளர் தினகரனுக்குத் தெரிவித்தார். இந்திய சட்டமுறைகளுக்கு அமைய இம்மீனவர்கள் விடுதலை செய்யப்படு வார்கள் என இந்திய அதிகாரிகள் அமைச்சருக்குப் பதிலளித்திருப்பதாகவும் எனினும், இம்மீனவர்களை கூடிய விரைவில் விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டிருந்த நிலையில், தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் 10 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்களென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போன நான்கு மீன வர்களில் நான்காவது நபரின் சடலம் நாகப்பட்டிணம் பகுதியில் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. நான்கு மீனவர்களில் ஒருவரின் சடலம் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு சடலங்கள் தமிழகத்தின் தொண்டி பிரதேசத்தில் மீட்கப்பட்டதாகவும் அவ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Saturday, April 16, 2011

உலகின் ஆறாவது செல்வாக்குமிக்க தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு டைம் சஞ்சிகையின் வாக்கெடுப்பில் கணிப்பு.......



உலகிலுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேரை உலகின் அதிக பிரபலம் பெற்று விளங்கும் டைம் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்தமைவாளர்கள், மதத்தலைவர்கள், சான்றோர் மற்றும் நீங்கள் விரும்பும் வீரமிக்கவர் போன்றவர்கள் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் முன்னணியில் உள்ள நூறு பேரை தெரிவு செய்யும் பொறுப்பை டைம் சஞ்சிகை உலகெங்கிலும் பரந்திருக்கும் தனது இலட்சக் கணக்கான வாசகர்களிடம் விட்டிருந்தது. வாசகர்கள் அளித்த வாக்குகளின் படியே இந்த செல்வாக்கு மிக்க முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 88,069 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்திற்கு தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் துணைவியார் மிச்சல் ஒபாமா 16,460 வாக்குகளைப் பெற்று 30 இடத்திற்கும், உலகின் மிகவும் அதிகாரம் படைத்த மனிதன் என்று கூறப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை வகிக்கும் பராக் ஒபாமா 8,669 வாக்குகளைப் பெற்று 46வது இடத்திற்கும் வந்திருக்கிறார். இலங்கை ஜனாதிபதியைப் பற்றி சில சர்வதேச அமைப்புக்களும், அமெரிக் காவை ஆதரிக்கும் சில நிறுவனங்களும் போலிப் பிரச்சாரங்களை செய்து இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த எத்தனித்துக் கொண்டிருக்கும் இவ்வேளை யில், சர்வசே புகழ்பெற்ற சஞ்சிகையின் கற்றறிந்த வாசகர்கள் அந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து இலங்கை ஜனாதிபதியின் சாதனைகளை மதிப்பீடு செய்து அவருக்கு இந்தளவு பெருந்தொகை வாக்குகளை வழங்கி ஆறாவது நிலைக்கு உயர்த்தியிருப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விடயமாகும்.

Thursday, April 14, 2011

தம்மீது அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது பிரதியமைச்சர் முரளிதரன்……..

தமது பெயரில் அமெரிக்க இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தை முடிந்தால் வெளியிடுமாறும் அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தம் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். போராட்டத்தில் இருந்து ஆயுத வன்முறையினால் எதுவும் சாதிக்கமுடியாது என்பதையுணர்ந்து ஜனநாயக வழிக்கு திரும்பி அதன் மீது நம்பிக்கைகொண்டு அரசியலில் பிரவேசித்து இன்று இந்த நாட்டின் மாபெரும் அரசியல் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் பிரதியமைச்சர்களில் ஒருவராகவும் உள்ளேன். இவ்வாறான நிலையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை எம்மை கடும் கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் எனது நற்பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை உண்டுபண்ணுபவையாகவும் உள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் எதுவித அசம்பாவிதங்களும் அற்ற நிலையில் மக்கள் மிகவும் ஒரு சந்தோஷமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அங்கு சென்றுவரும் எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதில் நான் மிகவும் விழிப்புடன் செயற்பட்டுவருகின்றேன். கடந்த காலத்தில் எமது மாகாணத்தில் இடம்பெற்றுவந்த கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை நிறுத்துவதற்கு கடும் நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உத்தரவு விடுத்த நிலையில் இன்று அந்த மக்கள் எதுவித அசம்பாவிதங்களும் இன்றி நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர். இவ்வாறான நிலையில் எதுவித ஆதாரமும் இன்றி இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரின் பெயருக்கு எதுவித ஆதாரமும் இன்றி களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடுவதை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நிறுத்தவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றேன். அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் நாங்கள் எதுவித விமர்சனமும் செய்யாத நிலையில் எமது நாட்டில் உள்ள அமைச்சர்கள் மீது பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அமெரிக்கா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் என் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதையும் கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.